சனி, ஜூலை 30, 2016

சினிமாக்கு போவோமா தியேட்டருக்கு?




























சினிமாக்கு போவோமா தியேட்டருக்கு?
வா.மு.கோமு

கூரைக்கொட்டகைகளில் திரைப்படங்களை கண்டு களித்தவர்கள் பாக்கியவான்கள் என்றே தோன்றுகிறது. அந்த பாக்கியவான்களில் அடியேனும் ஒருவன். தரை டிக்கெட் என்று 50 பைசாவுக்கு வாங்கிக் கொண்டால் திரை முன்பாக மணல் தரையில் அமர்ந்து கொள்ளலாம். பெரும்பாலும் இரவு இரண்டு காட்சிகள் தான். பீடி,சிகரெட்டுகளின் புகை அரங்கினுள் மிதந்து கொண்டேயிருக்க தட்டுவடை முறுக்கு ஏந்திய சிறுவர்கள் திரையில் வரும் உருவங்களை பார்வையாளர்கள் பார்க்க இடைஞ்சலாய் சுற்றிக் கொண்டேயிருப்பார்கள்.

நான் சிறுவனாயிருந்த காலங்களில் தொடர்ந்து எம்.ஜி.ராமச்சந்திரன் நடித்த படங்களை மட்டுமே பார்ப்பதில் அவா கொண்டிருந்தேன். அவர் தன் அம்மாவைக் காப்பதற்காக படும் துயரங்களை திரையில் கண்டு அம்மா மீது அதீத பாசம் கொண்டு திரிந்தேன். எந்த வில்லனும் அம்மாவை அபேஸ் செய்து போய்விடலாகாது என்பதில் என் தந்தையாரை விட கவனத்தில் கொண்டு திரிந்தேன்.

அம்மாயி சிவாஜி கணேசனின் ரசிகை. என்னை கூட்டிப்போய் மணலில் தன்னோடு அமர்த்திக் கொள்ளும். திரையில் சிவாஜிகணேசன் அழுதால் இதுவும் அழுது மூக்கைச் சிந்தி மணலில் வீசும். என் அப்பிச்சி அடித்தால் கூட அதுபோல அழாது. பெரும்பாலும் எனக்கு அழும் காட்சிகள் நிரம்பிய திரைப்படங்களைக் காண சிறுவயது முதலே பிடிப்பதில்லை. அப்போதெல்லாம் இப்போது போலவே வாரம் ஒருமுறை திரைப்படங்கள் கொட்டாய்களில் மாற்றப்படும். இன்றே கடைசி போஸ்டர் வேறு தனியே போஸ்டர் மீது ஒட்டப்படும். டீக்கடை முகப்பிலும் மளிகைக்கடை முகப்பிலும் ஒட்டப்பட்ட போஸ்டர்களுக்கு கடைசி நாளன்று ஃப்ரீ பாஸ் கொடுக்கப்படும். ஃப்ரீ பாஸ்காரர்கள் கடைசி நாளில் கொட்டாயில் குவிந்து விடுவார்கள்.

அடுத்த நாள் கூட்டு வண்டியொன்றில் இருபக்கமும்  புதிய படத்தின் தட்டி வைக்கப்பட்டு தப்பட்டையடித்தபடி ஒருவர் வருவார். அந்த காளைமாட்டுக்கு எங்கு எங்கு நிற்க வேண்டுமென்பது கூட பழகிப்போயிருக்கும். தப்பட்டை சப்தம் கேட்டாலே நாய்கள் குரைக்கத்துவங்கி விடும். சிறுவார்கள் அந்த வண்டியின் கூடவே பக்கத்து ஊர்வரை செல்வதெல்லாம் நடந்தது.

அப்போது நான் சென்னிமலையில் பத்தாவது வாசித்துக் கொண்டிருந்திருக்கலாம். பள்ளிக்கு மட்டமடித்து மதியக்காட்சிக்கு சென்று எங்கள் கிராமத்திற்கு வரும் பேருந்தை பிடிப்பதற்காக எல்லாப் படங்களையும் சென்னிமலையில் கடைசி அரைமணி நேரங்களை தவற விடுவதே வாடிக்கையாக இருந்தது. பின்பாக படம் பார்த்த நண்பர்களிடம் முடிவுக்காட்சிகளை விசாரித்து அதை மனக்கண்ணால் ஓட்டிப் பார்க்கும் வழக்கமிருந்தது. சனிக்கிழமை என்றால் மதியம் பள்ளி ஒருமணியோடு அரை நாளில் விடுப்பு என்பதால் சைக்கிளில் சென்று வந்து கொண்டிருந்தோம். எந்த சனிக்கிழமையும் நான் பள்ளி சென்றதில்லை. நண்பனோடு காலைக்காட்சி மற்றும் மதியக்காட்சி முடித்து விட்டுத்தான் பதிமூன்று மைல்கள் வந்து கொண்டிருந்தேன்.

சிவாஜிகணேசனின் பையன் பிரபு, சங்கிலி படத்தில் பயங்கரமாய் வருகிறார், என்று பள்ளியில் பேச்சாக இருந்தது. நண்பர்கள் ஓடி ஓடிப் பார்த்தார்கள். எனக்கு ஏனோ அதில் விருப்பமில்லை. ஒரு நடிகரின் மகன் திரையில் தோன்றுவதில் என்ன அதிசயம் இருந்துவிடப் போகிறது எனக்கு?

தைப்பூசத் தேர்த்திருவிழாவுக்கு சென்னிமலை முழூஊரும் மக்கள் கூட்டமாய் நிரம்பியிருக்கும். விடியும் வரை மூன்று தியேட்டர்களில் காட்சிகள் ஓடும். சகலகலா வல்லவன் திரைப்படத்தை பார்த்த சனம் அளவில்லாதது.காட்சியின் போது தியேட்டரின் கதவுகள் விரியத் திறக்கப்பட்டு அங்கெல்லாம் அமர்ந்து திரையை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது சனம். இன்று சென்னிமலையில் ஒரே திரையரங்கு தான். அதற்கும் சனத்தைக் காணோம்.

திரையரங்கிற்குச் செல்வதே மறந்து போன நிலையில் சதுரங்க வேட்டை படத்தைக் காண திரையரங்கிற்கு இரண்டு மூன்று வருடங்களுக்குப் பிற்பாடு சென்றோம் நானும் நண்பனும். மதியக்காட்சி அது. பதினொரு பேர்கள் அமர்ந்திருக்க இன்று படம் காட்ட மாட்டார்கள், என்றே நினைத்து அமர்ந்திருந்தோம். ஆனால் முப்பது வருடம் முன்பாக கடைசிப் பாடலாக, ‘வரவேண்டும் மகராஜா..’ பாடல் அத்திரையரங்கில் ஒலிக்கும். அது இப்போதும் ஒலிக்கவே கண்டிப்பாக படம் உண்டென முடிவெடுத்தேன். இடைவேளையில் கேண்டீன்காரரிடம் கேட்டேன். ‘கூட்டம் இப்படித்தானா எப்போதும்? என. ‘அப்படியல்ல.. வெள்ளி சனி ஞாயிறே படத்தை பார்த்துடுவாங்க! நீங்க வெசாழக்கிழமை வந்திருக்கீங்க!’ என்றார்.

இந்தத் தியேட்டரில், ’தென்றலே என்னைத் தொடுஓடிய 7 நாளும் என் நண்பனொருவன் தொடர்ந்து மதியக்காட்சி பார்த்து முடித்தான். அவன் இன்று நேவியில் இருக்கிறான் அப்படி அவன் தொடந்து காண பத்தாவது படிக்கையில் எது ஈர்த்தது? என்று இன்னமும் எனக்கு தெரியவில்லை. எனக்கென்னவோ மோகன் துரத்த படத்தின் நாயகி ஆண்பிள்ளை போல அங்குமிங்கும் நடந்தது கூட காரணமாய் இருக்கலாம். நிச்சயமாக பாடல்களுக்காக அவன் சென்றிருக்க வாய்ப்பில்லை. இதே போல் முரளி நடித்தஇதயம்படத்தினை திருப்பூரில் நண்பனொருவன் தொடர்ந்து பார்த்துக் கொண்டே இருந்தான். அவன் இப்போது ஆசியராக பணியில் இருக்கிறான். நானும் 1971-ல் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி வெளிவந்த Duel திரைப்படத்தை எனது லேப்டாப்பில் வைத்துக் கொண்டு வருடக்கணக்காக பார்த்துக் கொண்டேயிருக்கிறேன் நண்பர்களுக்கும் காட்டிக் கொண்டு! ஏன் என்ற கேள்விகளுக்கெல்லாம் சில சமயம் விடை கிடைப்பதேயில்லை.

விசயத்திற்கு வருவோம். சதுரங்க வேட்டை படத்தின் இயக்குனர் நண்பர் வினோத்திற்கு ஒரு போனைப் போட்டேன். அவரோ சிரித்தபடி, ‘ஏனுங் கோமு, எல்லாப்பக்கமும் ஓடி எடுத்துட்டாங்க! லேட்டா சென்னிமலையில போட்டிருக்காங்க!’ என்றார். பின்பாக மாதம் ஒருமுறையேனும் ஒரு திரைப்படத்தை கூட்டத்துடன் காண திரையரங்கிற்கு அந்த சனி ஞாயிறு சமயங்களில் சென்று வந்து கொண்டிருக்கிறேன்.

திரைப்படத்தை திரையரங்கில் மக்கள் கூட்டமுடன் காணவேண்டுமென்பதே அவாவாக இருக்கிறது. ரஜினிமுருகன் படத்திற்கு டிக்கெட் கிடைப்பதே பெரும்பாடாக இருந்தது. பையன் வேறு கூட்ட நெரிசலில் நசுங்கி விடுவானோ? என்ற கவலை வேறு ஒருபக்கம். படம் ஆரம்பிக்கையில் அவனுக்கு மகிழ்ச்சி வெள்ளம் கரைபுரண்டோடு ஓடுவதை அந்த இருளிலும் காண முடிந்தது. ‘என்னாப்பா இவ்ளோ கூட்டம்? விசிலெல்லாம் போடறாங்கப்பா!’ முன்பாக இருபது பேர் அமர்ந்து பார்க்கும் நாட்களில் அவனை அழைத்து வந்து கொண்டிருந்தேன். சனத்தைக கண்டதும் அவனுக்கு மகிழ்ச்சியாகி விட்டது.

திருப்பூர், கோவை, இப்போது ஈரோடு மாவட்டங்களில் இப்போது மல்டிஃப்ளக்ஸ் காம்ப்ளெக்ஸ்கள் உதித்து விட்டன. ஒரே இடத்தில் நான்கைந்து புதிய திரைப்படங்கள். நம்பி சனம் அங்கு செல்ல்லாம். எப்படியேனும் ஒரு புதிய படத்தை அங்கு கண்டு விடலாம். உள்ளே செல்பவர்களின் வாயை ஊதிக் காட்டச் சொல்கிறார்கள். மது வாடை வருகையில் அவர் வெளியே அனுப்பப்படுகிறார். அலைப்பேசிகள் அணைத்து வைக்கப்பட வேண்டும். குட்டிக்குட்டி அரங்குகள். இப்படியான அரங்குகள் இனி இங்கே அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம்.

இப்படியிருக்க, நான் முதலாக தனித்து டிக்கெட் எடுத்து திரையரங்கில் சென்று இமைக்க மறந்து பார்த்த படம்ஒரு கை ஓசை’. கொங்குமண்ணின் பேச்சு வழக்குகள் அதில் இருக்க அப்படி ஒட்டிக்கொண்டேன் அதனுடன். ‘அது அப்பிடியில்லீங்கெஎன்று பாக்கியராஜ் வசனம் ஆரம்பிப்பது அவரது படங்களை தொடர்ந்து காண ஆவலைத் தூண்டிவிட்டது. முன்பாக வில்லனுக்கு அடையாளம் தெரியாமல் இருப்பதற்காக கன்னத்தில் பெரிதாக மருகு வைத்துக் கொண்டு வில்லனின் கூடாரத்திற்கே சென்று பாட்டுப்பாடி ஆடி கடைசியில் மருகை எடுத்து வில்லனிடம், ‘நான் தான் ராஜா!’ என்று முகம் காட்டி அடிதடியில் இறங்கும் நாயகர்களை பார்த்தே வந்திருந்தேன்.

ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்தில் கூட அப்படித்தானே! மீசை வைத்தால் ஒரு ரஜினி. மீசையை எடுத்து விட்டால் ஒரு ரஜினி. போக என் தந்தையார் ஆசிரியர் என்பதால் ஏகப்பட்ட கெடுபிடிகளை என்மீது திணித்தவர் அவர். கெடுபிடிகள் அதிகமாகும் போது எதிர்க்கும் எண்ணம் வருவது இயல்பு தானே! பிஸ்கெட்டை வேணாமென ஒதுக்கி விடும் குழந்தையிடம், தின்னு தின்னு எனத் திணித்தால் மறுபடியும், வேணாம்போ! என்று ஒதுக்குகையிலேயே பிடிவாதமும் மூர்க்கமும் அங்கே தோன்றி விடுகிறது. அது தொடர்கிறது காலம் முழுக்க! ஒன்றைச் செய்யாதே என்றால் செய்யத் துணிவது.

சினிமா என்னைச் சீரழித்து விடுமென என் தந்தையார் நம்பியிருக்கலாம். அவரை ஏமாற்றுவது வெகு சுலபம். ஆசிரியர்களை மாணவர்கள் எல்லாக்காலங்களிலும் ஏமாற்றிக் கொண்டேயிருக்கிறார்கள் சுலபமாக. விஜயமங்கலம் டெண்ட்டு கொட்டாயில் இரவு இரண்டாம் காட்சி அவரை ஏமாற்றிச் செல்வது சுலபம். வீட்டின் அருகாமையுள்ள பழைய வீட்டில் என் அப்பாரு கட்டிலில் கிடப்பார். டியூசனுக்கு வரும் உள்ளூர் நண்பர்கள் இரவு எட்டரை ஆனதும் போய் விடுவார்கள்.

சற்று தூரத்திலிருந்து வரும் நண்பன் அப்பாரு வீட்டில் தங்கி விட்டு காலையில் நேரமே சென்று விடுவான்,. அவனுக்குத் துணையாக நான் கிடப்பேன். இரவு ஒன்பதரை என்கிறபோது அப்பாவின் சைக்கிளை நேக்காக தூக்கி வெளியில் கொண்டு வந்து விடுவோம். அப்பாரு பொக்கை வாயில் காற்றுப்போக ஒன்பது மணிக்கே தூங்கி விடுவார். கதவை தாழிடாமல் சாத்தி விட்டு டபுள்ஸ் கிளம்பி விடுவோம். அவர் தூங்கினால் ஒரே தூக்கம் விடியும் வரை.

அப்படி பல படங்கள். அவற்றில், ’சந்திப்புஎன்கிற படத்தை மறந்து விட முடியாது. சிவாஜிகணேசன், ஸ்ரீதேவி, ராதா, பிரபு என பெரும் கூட்டம் நடித்திருந்தது. டெண்டு கொட்டாயில் திரையைச் சுற்றிலும் சீரியல் பல்ப்புகள் வேறு. ’சோலாப்பூர் ராணி.. சோலாப்புர் ராஜாஎன்று பாடல் ஆரம்பித்ததும் சீரியல் பல்புகளும் எரிய ஆரம்பித்து விடும். திருப்தியோடு வெளியே வருகையில் சைக்கிள் டயர் செத்த தவளையாக கிடக்க இருவருக்குமே பயம் பிடித்துக் கொண்டது. எவன் ஆறு கிலோ மீட்டர் உருட்டிச் செல்வது சாமத்தில்?

எப்படியோ கேண்டீன்காரன் காற்றடிக்கும் பம்ப் வைத்திருக்க அதை வாங்கி அடித்துக் கொண்டு காற்றிருக்கும் வரை செல்ல்லாமென அழுத்தோ அழுத்தென அழுத்தி வந்தோம். நல்லவேளை காற்று வழியில் எங்கும் குறையவில்லை. வீடு வந்து பார்க்கையில் அன்று கதவு உள்புறமாக தாழிடப்பட்டிருந்தது! அன்று எங்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி தான். பக்கத்து விட்டுக்காரர் திண்ணையில் படுத்துக் கொள்ளும் யோசனை தன் ஓடிற்று எனக்கு. ஏனென்றால் அப்பாருக்கு காது செவிடு. கூப்பிட்டு கத்தி கதவை தட்டினால் பக்கத்து வீட்டிலிருந்து அப்பா எழுந்து வந்தாரென்றால் சாமம் ஏமாம் பார்க்காமல் தடியெடுத்து விளாசுவார்.

திடீரென ஒரு ஐடியா உதித்தது. வீட்டின் பக்கத்திலேயே ரயில்வே ட்ராக் என்பதால் விரைவு ரயில்கள் செல்கையில் கதவை குலுக்கி அசைப்பது என்று முடிவானது. இரவு நேரத்தில் அன்று பார்த்து விரைவு ரயில்களின் வரவு பத்து நிமிடத்திற்கு ஒன்றாக இருந்தது. விரைவு வண்டி தட்தட்த்து செல்லும் சமயங்களில் கதவைக் குலுக்கினோம். எட்டாவது மெயில் ஊரைக் கடக்கையில் கதவின் உள் நாதாங்கி விலகி கதவு திறந்தே விட்டது. அந்த அளவுக்கு தடதடவென வெறியாய் குலுக்கியிருந்தேன். பின்பாக இரவுக் காட்சிக்கு செல்வதை அன்றோடு நாங்கள் மறந்தே போனோம். அப்பாரு இத்தாப்பெரிய கலவரம் கதவு நீக்க நடந்தது அறியாமல் கயிற்றுக் கட்டிலில் சின்னக் குறட்டையொலியுடன் தூங்கிய வண்ணமிருந்தார்.

எனது மங்கலத்து தேவதை நாவலின் நாயகி பிரேமாவுடன் பல திரைப்படங்களை பெருந்துறையில் கண்டு ரசித்திருக்கிறேன். முழுமையாக ஒன்றிரண்டு படங்களைத் தான் பார்த்திருப்போம். அவற்றில் பல அவளாக கோபத்தில் கொந்தளித்து எழுந்து ஓடும் படங்கள் அதிகம். பின் நான் எழுந்து ஓடி வந்து விடுவது. யார் ஓடினாலும் ஒருவர் முழுத் திரைப்படத்தையும் கண்டு தான் எழுந்து வருவோம். பிரேமாவுடன்உன்னாலே உன்னாலேதிரைப்படத்தைக் கண்டது தான் அழகிலும் அழகு. அந்தப் படத்தின் நாயகி நாயகனுடன் தேவையின்றி கொந்தளித்துக் கொண்டே தன் வாழ்க்கையை இழந்து விடுவாள். சேம் பிரேமா தான்! அவள் வயிற்றெரிச்சலில் தான் முழுப்படத்தையும் கண்டாள். அவளையே பிரதிபலிப்பது அவளுக்கு கொடுமையாக இருந்தது எனக்கே தெரிந்தது. அன்று இருவரில் யாரும் கோபித்துக் கொண்டு எழுந்து ஓடவில்லை.

எம்பதுகளின் இறுதியில் கோவையில் எனக்கு மலையாளத் திரைப்படங்களை மட்டுமே காணும் தமிழ் நண்பன் அறிமுகமானான். சமயத்தில் மிருகயா, நாயர்சாப், சூரியாம்சம், நெம்பர் டொண்ட்டி மெட்ராஸ் மெயில், என்று மோகன்லால், மம்முட்டி படங்களாக பார்த்து வைத்தேன். பின்பாக இப்போது தான் பார்க்கத் துவங்கி இருக்கிறேன். இப்போது ஷட்டர், 1983, பிரேமம், திருவனந்தபுரம் லாட்ஜ், உஸ்தாத் ஹோட்டல், வடக்கன் செல்பி என்று நண்பர்கள் சில படங்களை தட்டுக்கள் வாயிலாக அறிமுகப்படுத்துகிறார்கள். மலையாளப்படங்களின் நிதானமான நகர்வு மட்டுமே அன்றிலிருந்து இன்று வரை சிறப்பாகப்படுகிறது.

தமிழில் தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் படங்கள் அனைத்துமே ஒருமுறை திரையரங்கில் காணலாம் என்கிற அம்சத்தோடு தான் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. எந்தப் படங்களுமே பார்வையாளனை ஏமாற்றமடையச் செய்வதில்லை. போக கதையம்சங்களில் மாற்றமான வேறு வடிவிலான படங்களும் வருகின்றன.

திரைத்துறை வளர்ச்சியின் பாதையில் வெற்றிநடை போட்டுக் கொண்டு செல்கிறது. திரைத்துறையில் இருக்கும் எத்தனையோ இளைஞர்கள் கையில் பலவித சாமார்த்தியங்கள் நிரம்பியிருக்கின்றன. சந்தர்ப்பங்களும் வாய்ப்புகளும் அவர்களுக்கு அருகாமையில் இப்போது இருக்கின்றன. முன்பு எட்டாக்கனியாக இருந்த திரையுலகு கிட்டத்தில் வந்திருக்கிறது. சி செண்டர் பார்வையாளர்களை டிவிப் பெட்டிகள் வளைத்துப் பிடித்துக் கொண்டதால் சி செண்டரில் திரையரங்குகளே இல்லை. இருந்தாலும் பெரிய பாதிப்பொன்றும் இல்லை.

நான் முழுதாக ம...ஆனந், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்தகடலைதிரைப்படத்திற்கு வசனம் எழுதி முடித்து அதன் சூட்டிங்கிலும் ஒரு வாரகாலம் கலந்து கொண்டேன். திரைப்படம் ஒட்டு மொத்த பணியாளர்களின் மாபெறும் உழைப்பு. திரைப்படம் சார்ந்த ஒவ்வொரு பிரிவினரும் உழைப்பையும், உடல் வருத்தத்தையும், வேர்வையையும் அங்கு சிந்தியே ஆக வேண்டும். வெய்யில் மழை அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல! எத்தனையோ கட்டங்களைத் தாண்டித்தான் ஒரு திரைப்படம் திரைக்கு வருகிறது. அது சின்ன வெற்றி என்றால் கூட அதன் உழைப்பாளர்கள் அனைவருக்கும் மாபெறும் வெற்றி மகிழ்ச்சி தான். அந்த வெற்றி தான் அவர்கள் தொடர்ந்து இயங்குவதற்கான, பணியாற்றுவதற்கான பலத்தையும் வைராக்கியத்தையும் கொடுக்கிறது.

குறிப்பிட்ட நாயகர்களையே தொடர்ந்து திரையில் பார்த்து வந்த பார்வையாளர்கள் தங்கள் பக்கத்து வீட்டுக்காரனைக் கூட திரையில் கண்டு ரசிக்கிறார்கள். எல்லாமே காலத்தின் வளர்ச்சி தான்.

000


Post Comment

வியாழன், ஜூலை 28, 2016

மூஞ்சிப் புத்தக பதிவுகள்

மூஞ்சி புத்தக பதிவுகள்





















-டேய் கண்ணாளா! நான் தான்..வீட்டை விட்டு வெளிய வந்து பேசுடா பேமாணி! இன்னிக்கி நைட் நாம ஓடிப்போறோம். காத்து போறது தெரியாம தூங்கிடாதடா! 12 மணி! பஸ் ஸ்டாப்பு!

-ஏண்டி இத்தன தடக்கா சொல்றே? ஆனா உங்கொப்பன நெனச்சா தன் பயமா இருக்குடி! மிதிப்பானே! ஒரு வருச காதல்ல ஒம்போதுவாட்டி என்னை அட்டாக் பண்ணிட்டான்.

-இனி முடியாதில்ல! பயந்துட்டு படுத்துக்காதடா பாவி! அப்புறம் யாரு கூட வர்றே? சுந்தரேசன் கூடவா? அவனுக்கு இருக்குற தைரியங்கூட உனக்கில்லடா..அவனையே கூட்டிட்டு ஓடப்போறேன் நான்! நீ வடை போச்சேன்னு உக்காந்துக்கப் போறேடா!

-அப்ப அவனை கூட்டிட்டு ஓடுடி கழுதை! உங்கொப்பன் மிதிக்கெல்லாம் அவந்தான் தாங்குவான்! ஆனா ஒன்னு நீ சொல்றதை ஒரு நாளும் கேக்க மாட்டான்!


000

சென்னையிலிருந்து நண்பன் சுந்தர் 8 மணி போல போன் செய்தான்! ரொம்ப சந்தோசத்தில் இருப்பதாக கூறினான்! சரி சந்தோசம் தானே வாழ்க்கை! மேட்டருக்கு வாடி, என்றேன்!

-என் ஆபீஸ்ல சுந்தரி பத்தி சொன்னன்ல பாஸ், அவ இன்னிக்கி முகநூல்ல நான் போடற என் போட்டாக்கள் அத்தனையும் அழகுன்னு சொல்லிட்டா! போக சினிமாக்கு முயற்சி பண்ணு, போட்ட்டா செசன்ல நீ ஜெயிச்சிடுவே! எங்கம்மாட்ட கூட உன்னை முக நூல்ல காட்டினேன்.. பையன் அழகா இருக்காண்டின்னு சொன்னாங்க! அப்படின்னா பாஸ்!

-நீ காது வரை சிரிப்பாணி காட்டிட்டு வந்துட்டிய? அட கெடுத்தியே கதையை! பதிலுக்கு நீயும் சென்னையிலயே பூராம் அட்டு பிகருக! நீ தான் அழகு! உன் போட்டோவ என் அம்மா கிட்ட, பாரும்மான்னு சொன்னேன்.. என் மருமவ என்ன விட அழகுடான்னு எங்கம்மா சொல்லுச்சுன்னு ஓட்டலியா?

-உங்கள மாதிரி டைமிங் சென்ஸ் என்கிட்ட இல்ல பாஸ்.. நாளைக்கி சொல்லவா?

-தீபாவளி அன்னிக்கி தான் பட்டாஸ் போடணும்டி!!!

000

-ஹலோ, இன்னிக்கி ரிங் ஆனதீம் எடுத்துட்டீங்க போல! வழக்கமா ரெண்டு மூனு விசுக்கா கூப்பிட்டாத்தான் எடுப்பீங்க?

-எடுக்கலீன்னாலும் குத்தஞ் சொல்றே, எடுத்தாலும் குத்தஞ் சொல்றே! ஏண்டி நீ இப்புடி?

-சரி விடுங்க, என்ன பண்ணிட்டு இருக்கீங்க?

-சேவிங் பண்ணிட்டு இருந்தண்டி!

-நான்னதும் உடனே எடுத்துட்டீங்க? அவ்ளோ ஆசையா எம்மேல?

-தாவாங்கட்டையில பிளேடு கீறீடக்கூடாதில்லியா! அதான் ரேசரை வச்சுட்டு பேசுறேன்.. ஹலோ..கட் பண்ணிட்டா.. கொய்யாலே.. நேரங்காலமில்லாம கொஞ்சோனுமின்னா யாருனால முடியும்??????

000

Post Comment

வியாழன், ஜூலை 21, 2016

எனக்கும் அப்படித்தானுங்க தோணுச்சு!






























எனக்கும் அப்படித்தானுங்க தோணுச்சு!

சிறுகதை : வா.மு.கோமு

வரதராஜனுக்கு நேரம் ஆகியபடியிருந்தது. வீட்டில் அம்மா ஒருத்தி மட்டும் தான். நேரம் இரவு பத்தையும் தாண்டிவிட்டது. கிட்டத்தட்ட அந்த குறுநகரில் எல்லாக் கடைகளும் சாத்தப்பட்டுக் கொண்டிருந்தன. இவன் பேருந்து நிறுத்தத்தில் காத்து நின்றிருந்தான். அம்மா இவன் போய் வீடு சேர்ந்து வண்டியை நிறுத்தும் வரை தூங்காது. அம்மாவுக்கு ப்ரஷர் வேறு இருக்கிறது. மாத்திரையை சரியான நேரத்திற்கு போட்டு விட்டு தூங்க வேண்டும். அம்மாவுக்கு ஒரு செல்போனை வாங்கி கொடுத்து விட்டால் இந்த மாதிரி சமயங்களில் வர தாமதமாகுமெனச் சொல்லி விடலாம். 

எப்படியும் சீதா வந்து நிறுத்தத்தில் இறங்க பதினொன்று கூட ஆகிவிடும். சற்றும் முன்பாகத்தான் அவள் எண்ணிற்கு அழைத்துப் பேசியிருந்தான். பேருந்து இறைச்சலில் அவள் சொன்னது, ’இன்னம் அரைமணி நேரத்துல வந்துடுவேங்கண்ணா!! அண்ணா சாரிண்ணா’. இவன், சாரியெல்லாம் எதுக்கு சீதா! என்று சொல்லி விட்டு வைத்து விட்டான். சீதாவை இதற்கும் முன்பாக இரண்டுமுறை சந்தித்திருக்கிறான் வரதராஜன். அதுவும் இவன் கீதா அறிமுகப்படுத்திய பின் தான்.

என்னோட ஆள் தான் வரதராஜன், என்று சீதாவிடம் முதன்முதலாக அறிமுகப் படுத்துவாள் என்று நினைத்திருந்தவனுக்கு அன்று ஏமாற்றம் தான். என்னோட பெஸ்ட் ஃப்ரண்டு, எனக்குன்னா எது வேணா செய்யும், என்றே அறிமுகப்படுத்தினாள் கீதா. அது இவனுக்கு ஏன் என்று தான் தெரியவேயில்லை.

கீதாவும் சீதாவும் ஒரே கம்பெனியில் தான் வேலை செய்கிறார்கள். சீதாவுக்கு சொந்த ஊர் திருநெல்வேலியாம். இப்படி வெளியூர்களில் இருந்து பெண்கள் பலர் இங்கே திருப்பூர் பகுதிகளுக்கு வந்து அறையெடுத்து தங்கி பணிக்குச் சென்றுவந்து கொண்டுதான் இருந்தார்ர்கள். சீதாவை இருள் சூழ்ந்த நேரத்தில் கீதா அன்று அறிமுகப்படுத்தினாள். இவன் உயரத்திற்கே கீதா இருப்பாள். ஆனால் சீதா இவன் தோள்பட்டைக்குத்தான் வருவாள் போலிருந்தது. போக சீதா மாநிறமா? சிவப்பா? என்றுகூட இரவு நேரத்தில் இவனால் கண்டறிய முடியவில்லை. ஆனால் கீதாவை விட சாப்பாடு நன்றாய் சாப்பிடுகிறாள் போல! என்று நினைத்துக் கொண்டான். மஞ்சள் வர்ணத்தில் சுடிதார் அணிந்திருந்தாள்.

அவளின் அறை ஒரு காம்பெளண்டினுல் பின்பக்கத்தில் இருந்தது. சாலையோரத்தில் முகப்பில் வீட்டு ஓனர் பங்களாவில் தங்கியிருந்தார். அன்று அந்த சாலையில் நின்று தான் அவசரமாய் பேசி விடைபெறுவதில் கீதா குறியாய் இருந்தாள். இரண்டாவது முறையாக கீதா இவனை பகலில் ஒரு விடுமுறை நாளில் கூட்டிப் போனாள். பத்துக்கு பத்து அளவிலான சிறிய அறை தான் அது. பெண்கள் தங்கியிருக்கும் அறைகளுக்குள் இவன் முன்பாக எங்குமே சென்றதில்லை. உள்ளே வெய்யில் வேக்காட்டிலும் வேறு எதோ பூவின் மணம் வீசிக் கொண்டிருந்தது. போக முகம் பார்க்கும் கண்ணாடி, சீப்பு, பவுடர் டப்பா என்று ஒரு ட்ரேயில் இருந்தன.

காலையில் சிக்கன் ஒருகிலோ எடுத்து வந்திருந்தாளாம் சீதா. இவளுக்கு போனைப் போட்டு அறைக்கு மதியம் வரச் சொல்லி விட்டாள். இவள் வரதராஜனை வண்டியை எடுத்துக் கொண்டு வரச் சொல்லி விட்டாள். இவனுக்கு சிக்கன் விசயம் அறைக்கு வந்தபிறகுதான் தெரிந்தது. சும்மா எப்படி வாயை நனைக்காமல் சிக்கனில் கை வைப்பது? இவன் ஒன்றும் பேசாமல் சுவற்றில் சாய்ந்து அமர்ந்து அவளின் சூட்கேஸ் மீது கிடந்த விகடன் இதழை எடுத்து புறட்ட ஆரம்பித்தான்.

இரண்டு பெண்கள் சேர்ந்து கொண்டால் பேச்சுக்கு குறைச்சலாகவா இருக்கும்? கம்பெனி விசயங்களை அலாசு அலாசென அலாசினார்கள். மேனேஜருக்கு வர வர திமுறு ஜாஸ்த்தி ஆயிட்டே இருக்குடி! என்று பேசினார்கள். அடிக்கடி குமாரு, குமாரென பேசிக் கொண்டார்கள். இவன் பத்திரிக்கையை புறட்டுவதை நிறுத்தி அவர்களைப் பார்த்தான். இவன் பார்ப்பதைக் கண்ட கீதா இவனுக்கு பதில் சொன்னாள். குமாரு கம்பெனில இவளோட ஆளு!

ஆமாம் பின்னே வெளியூரிலிருந்து வந்து தங்கியிருக்கும், சம்ப்பாதிக்கப் போகும் பெண்ணுக்கு ஒரு காதலன் இல்லாமல் இருந்தால் எப்படியிருக்கும்? போரடிக்குமே சும்மா இருந்தால்! என்று இவனாக மனதில் நினைத்துக் கொண்டு பத்திரிகையில் ஆழ்ந்தான். ஆனால் கீதா விட்டபாடில்லை இவனை. இவுங்க ரெண்டு பேரும் இன்னம் ரெண்டொரு மாசத்துல கல்யாணம் பண்ணிக்கப் போறாங்க வரது. அப்புறம் இந்த ரூமை காலி பண்ணிட்டு அவன் ரூமுக்கு திருப்பூரே போயிடுவா.என்று சொல்லிக் கொண்டிருகையில் சீதா தன் செல்போனை எடுத்துக் கொண்டாள். யாருக்குடி போன் பண்றே? குமாருக்கா?’ என்ற கீதாவுக்கு ஆமாமென தலையை ஆட்டினாள் சீதா.

எதிர்முனையில் ஆள் எடுத்ததுமே கீதா இவனிடம் ஆரம்பிப்பது மாதிரியே. எங்கிருக்கீங்க?’ என்றாள். பேசிக்கொண்டே அறையை விட்டு வெளியே சென்றாள் சீதா. சீக்கிரமாய் திரும்பி வந்தவள், ‘குமாரு கஜலட்சுமியில படம் பாத்துட்டு இருக்கான். அவன் பேசுறதே கேக்க மாட்டீங்குது!என்று சொல்லியபடி வந்து அமர்ந்தாள்.

நீயும் போயிருக்கலாமேடி! ஜம்முனு உக்கோந்து ஞாயித்துக்கிழமையும் அதுவுமா ஜாலியா படம் பாக்கிறதை உட்டுட்டுஎன்றாள் கீதா அவளிடம்.

பாத்தீல்லடி வெளிய, ஆறுசெட் துணிமணிகளை துவைச்சி காயப் போட்டிருக்கேன். குமாரு கூட போயி படம் பார்த்துட்டு இருந்தா அழுக்குத் துணி போட்டுட்டு தான் கம்பெனிக்கி வரணும். சரி சாப்பிடலாமா?’ என்றாள். சரி நீங்க சாப்பிடுங்க, நான் வண்டியெடுத்துட்டு போயிட்டு வந்துடறேன்என்றான் வரதராஜன்.

எங்கெ சரக்கடிக்கிறக்கா?’ என்றாள் கீதா. இவன் ஒன்றும் சொல்லாமல் எழுந்தான்.

நீங்க அங்கியே அடிச்சுட்டு வர்றப்ப எங்களுக்கு மூனு பீர் வாங்கிட்டு வாங்க! சீக்கிரம் வரணும் பாத்துக்கங்க! எனக்கு பசி இப்பவே!என்றாள் கீதா. கீதா எப்பாவது இவனோடு அமர்ந்து பீர் அருந்துவாள். ஆனால் இன்று அவள் தோழி சீதாவோடு இருக்கையில் குடி பற்றி பேசவே மாட்டாள் என்றுதான் நினைத்திருந்தான் வரதராஜன். ஆனால் அவளோ அவளுக்கும் சேர்த்து வாங்கி வரச் சொல்லிவிட்டாள். இவன் சரி என்று சொல்லி விட்டு கிளம்பினான்.


இவன் டாஸ்மார்க் பாரில் அமர்ந்து அருந்திக் கொண்டிருக்கையில் கீதாவின் அழைப்பு வந்தது. வரும்போது பெப்ஸி ஒன்னரை லிட்டர் கேன் வாங்கி வரவேண்டுமாம். இவனிடம் பைசா அதற்குத் தேறாது தான். மூன்று பியர் பாட்டில்களோடு அறைக்கு இவன் திரும்பி வந்ததும் கீதா முதலாக அதைத்தான் கேட்டாள். இவன் மறந்துட்டேன் சாரிஎன்றான்.

உங்க சாரியைக் கொண்டி குப்பைக்கூடைல போடுங்க! ஒன்னு சொன்னா மறந்துட்டேன்னு சொல்லிடறது. சரி நீங்க முதல்ல சாப்டுட்டு கிளம்புங்க! நாங்க அப்புறம் சாப்பிட்டுக்கிறோம். ஈவனிங் நான் பஸ்சுல வந்துடறேன்.என்றாள். பாட்டில்களை அறையின் ஓரத்தில் வைத்து விட்டு,‘கடையிலயே சாப்டுட்டேன் கீதா, நான் கிளம்புறேன்என்று சொல்லி விட்டு வெளியேறினான். கீதாவோ இல்லை சீதாவோ எதாவது சொல்லுவார்கள் என்று எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சே! வெட்டிச் செலவு செய்யவே வந்த மாதிரி ஆயிடுச்சே!, முனகிக்கொண்டே வண்டியைக் கிளப்பினான்.

பின்பாக இப்போது தான் சீதாவுக்காக இங்கே காத்து நின்றிருக்கிறான் இரண்டு மாதங்களுக்குப் பிறகாக. இதுவும் கீதாவின் ஏற்பாடு தான். சீதா திருநெல்வேலியில இருந்து கிளம்பி இங்கே வந்து சேர எப்பிடியும் மணி பத்தாயிடும் வரது. நீதான் பார்த்து கூட்டிட்டு வந்து அவ ரூம்ல விடணும், என்று காலையிலேயே கீதா இவனிடம் சொல்லியிருந்தாள். இவனைப் பற்றி சுத்தமாய் தெரிந்து வைத்திருந்தாள் கீதா. இவனும், அதுக்கென்ன! கூட்டிட்டு வந்து விட்டுடறேன்! என்றே சொலியிருந்தான். ஒன்பதரை மணி போல ஒரு கோட்டர் போட்டது. கொஞ்சம் திருகலாய் இருந்தது. எதற்கும் இருக்கட்டுமே என்று ஒரு கோட்டரையும் தண்ணி பாக்கெட்டும் வாங்கி வண்டி டேங்க் கவரில் வைத்திருந்தான். வெறும் வயிறாய் இருக்க பசி வேறு அவனை வாட்டியது. நல்ல காரமாய் மீன் சில்லி வீசலாம்! ஆனால் எட்டரை மணிக்கே தள்ளுவண்டிக்காரர்கள் பொருள்களை முடித்து விட்டு கிளம்பி விடுவார்கள்.

வந்து வந்து நின்று கிளம்பிக் கொண்டிருக்கும் பேருந்துகளில் சீதா ஏதேனுமொன்றில் இறங்கி விடுவாளென பேருந்துகளின் படிக்கட்டுகளை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருவழியாய் சீதா கையில் ஒரு பெரிய பேக்கோடு பேருந்தில் வந்து இறங்குகையில் சரியாய் மணி பதினொன்று தான். கூடவே ஒன்றிரண்டு பேர் இறங்கினார்கள். பேருந்திலிருந்து இறங்கியதுமே இவனைப் பார்த்து விட்ட சீதா பேக்கை தூக்கிக் கொண்டு இவனிடம் வந்ததும் மீண்டும், ‘சாரிண்ணா! கீதா வேற போன்ல திட்டிட்டே இருந்தா இப்பக் கூட! உங்ககிட்ட எதாச்சும் சொன்னாளுங்களா அண்ணா?’ என்றாள். இவனுக்கு அவள் காலையில் சீதா வரும் தகவலை சொன்னதோடு சரி. இப்போது வரை அவள் இவனுக்கு போன் செய்யவேயில்லை. அதுவும் கூட ஆச்சரியமாய் இருந்தது இவனுக்கு.

நைட்டுக்கடையில சாப்டுட்டு போயிடலாம் சீதாஎன்றான் இவன்.

ஐய்யோ வேண்டாம்ணா! போலாம்ணா. வீட்டுல ரவை இருக்கு போயி செஞ்சுக்கறேன்

இல்ல எனக்கு பசி கொன்னெடுக்குது. பேசாம வண்டியில ஏறு சீதா. கடைசிக்கி ஆளுக்கு ரெண்டு புரோட்டாவாச்சிம் சாப்டுட்டு போயிடலாம்என்றதும் மேலே பேசாமல் இவனுடன் இரவுக் கடைக்கு வந்து மூன்று விரலில் புரோட்டாவை எடுத்து சாப்பிட்டாள். நல்லா அள்ளிப் பூசு சீதாஎன்று சொல்லலாமென நினைத்தான் வரதராஜன். ஆனால் அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ! என்று விட்டு விட்டான். அதற்குள் சீதாவுக்கு கீதாவின் அழைப்பு வந்துவிட்டது. சீதா மெதுவாகவே அவளுக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள். சாப்டு முடிச்சுட்டு கூப்பிடறேன்என்று கட் செய்து கொண்டாள்.

சாப்பிட்டு முடித்தபிறகு இவன் கல்லா டேபிள் மீது வைக்கப்பட்டிருந்த சுவீட் பீடா இரண்டை எடுத்து வாயினுள் திணித்துக் கொண்டான். சீதாவுக்கும் இரண்டு எடுத்துக் கொடுத்து விட்டு பணத்தைக் கொடுத்து விட்டு வண்டி அருகே வந்தான். வண்டி சீதாவை ஏற்றிக் கொண்டு கிளம்பிற்று. தன் பெரிய பேக்கை முதுகில் மாட்டிக் கொண்ட சீதா தாண்டுக்கால் போட்டு இப்போது இவனை ஒட்டி அமர்ந்து கொண்டாள். எப்பவுமே டூவீலரில் தாண்டுக்கால் போட்டுத்தான் உட்காருவாளாம்! ஒரு சைடாக அமர்ந்தால் கீழே விழுந்து விடுவோமோ என்று பயமாய் இருக்குமாம்! மெயின் சாலையிலிருந்து இவளின் அறை இருக்கும் ஊருக்கு கிளைப்பாதையில் பிரிந்தான்.

அண்ணா அப்படி ஓரமா வண்டியை நிறுத்துங்கண்ணா! யூரின் எனக்கு பஸ்ல வர்றப்பவே அர்ஜெண்ட்டு!என்றாள் சீதா. இவன் சாலையின் ஓரமாய் வண்டியை நிப்பாட்டினான். அவள் பேக்கை கழற்றி சீட்கவர் மீது வைத்து விட்டு தூரமாய் தள்ளிப் போனாள். உலகத்திலேயே யோக்கியமானவனாக இருப்பவன் போல அவள் சென்ற திசை நோக்கிப் பாராமல் எதிர்க்கே சாலையில் ஏதாவது தட்டுப்படுகிறதா? என்று பார்க்க ஆரம்பித்தான்.

இவனுக்கும் சிறுநீர் வரும்போல இருக்கவே நேராக நடந்து குழி அருகில் நின்று பேண்ட் ஜிப்பை இறக்கினான். ஒருவருக்கு வந்தால் அடுத்தவருக்கும் வந்துவிடுமென சொல்கிறார்களே! அது நிசம் தான் போல! என்று நினைத்துக் கொண்டான். இவன் திரும்ப வண்டிக்கி வருகையில் சீதா காதில் செல்போனை வைத்து பேசிக் கொண்டிருந்தாள்.

வந்துட்டோம்டி! வீட்டுக்கிட்ட இறக்கி வுட்டுட்டு இப்பத்தான் கிளம்பிப் போனாப்ல வரதராஜண்ணன்என்றவள் கட் செய்து விட்டு சிறிது நேரம் மேலே வானத்தை அன்னாந்து பார்த்தாள். அவள் விடும் மூச்சு கொஞ்சம் விரைவாக இருப்பது மாதிரி இவனுக்கு தோன்றியது. அடுத்து இவனது செல்போன், ’லில்லி மலருக்குக் கொண்டாட்டம்! உன்னைப் பார்த்ததிலே!என்று பாட ஆரம்பித்தது.

கீதாவா இருந்தா அவுட் ஸ்பீக்கர் போடுங்கண்ணா!என்றாள் சீதா. இவன் அழைப்பது கீதா தான் என்று சீதா சொன்னது மாதிரியே அவுட்ஸ்பீக்கர் போட்டு பேசினான்.

எங்கிருக்கிறீங்க?’

வந்துட்டேன் நம்ம ஊருக்கிட்டயே!

வண்டிச் சத்தமே கேக்கலியே! ஏன் தான் இப்படி பொய் பேசறீங்களோ! சீதாவை எந்தக் காட்டுக்குள்ள கூட்டீட்டு போயி பண்ணீட்டு இருக்கீங்க?’

ஏண்டி இப்படியெல்லாம் பேசுறே? பாவம்டி! பாவம் புடிச்சுக்கும் உனக்கு!

பாவம் புடிக்குது அஞ்சாறுல, எனக்கு சீதாவைப் பத்தி தெரியாதுன்னு நினைச்சுட்டீங்களா? இல்ல உங்களைப் பத்தி தான் எனக்கு தெரியாதா? அதும் நைட்டுல சான்ஸ் கெடச்சு நீங்களாவது உடறதாவுது! அவ அதுக்கும் மேல இருப்பா!

போனை வெய்யிடி மொதல்ல லூசுக்கருமம்! அப்புறம் ஏண்டி என்னை கூட்டிட்டு போயி உட்டுருங்க! பாவம் சாமத்துல அவ என்ன பண்டுவான்னு சொன்னே? மூடீட்டு கம்முன்னு இருந்துருக்கலாம்ல!கோபம் மிகுதியில் போனை கட் செய்தான். இப்போது இவனும் வானத்தை வெறிக்கப் பார்த்தான்.

மீண்டும் அவள் அழைப்பே வந்தது. கட் செய்தான். மீண்டும் அழைப்பு வரவே ஒட்டு மொத்தமாய் சுவிட்ச் ஆப் செய்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டான். இப்போது இவனுக்கும் மூச்சு வாங்கிற்று.

இவ பேசிக் கடுப்பைக் கிளப்புறதைக் கேட்டா இவ சொன்னமாதிரி நெசமாவே பண்ணிடலாம்னு இருக்கு சீதா!வானம் பார்த்துக் கொண்டே பேசினான்.

எனக்கும் அப்படித்தானுங்க தோணுச்சு வரதுஎன்றாள் சீதாவும். அப்போது அவள் போனுக்கு அழைப்பு வரவே யாரெனப் பார்த்து கட் செய்து இவனைப் போலவே செல்போனை சுவிட்ச் ஆப் செய்தாள் சீதா.

உடுங்க வண்டியை, என்னோட ரூமுக்கு போயிடலாம். நீங்க மெதுவா அப்புறம் போயிக்குவீங்களாம்என்றாள் சீதா.

000


Post Comment