சனி, நவம்பர் 26, 2016

ஜி.கார்ல் மார்க்ஸின் கதைகள்- ஒரு பார்வை


வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)
ஜி.கார்ல் மார்க்ஸ்

தமிழில் சிறுகதைகளின் வரத்து குறைந்து போய் நீண்டகாலம் ஆகிவிட்டது. பத்திரிக்கைகள் சிறுகதைகளுக்கு என்று பக்கங்களை ஒதுக்குவதற்கு தயங்குகின்றன. இடைநிலை இதழ்கள் கூட பெயர் பெற்ற ஆசிரியர்களின் வறட்டு முயற்சிகளை, அவர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள போராடுகிறார்கள் என்று எழுத்தின் வாயிலாக கூட உணர இயலாத ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன.

திடீரென வாசகர்கள் கட்டுரை வாசிப்பாளர்களாக மாறியாக வேண்டிய கட்டாயத்தை இடை நிலை பத்திரிக்கைகள் உருவாக்கி விட்டன. தான் வாசிக்கும் புத்தகத்தில் இன்ன இன்ன இருந்தால் நன்றாக இருக்குமென இந்த மாற்றங்கள் துவங்கிய காலத்தில் வருத்தப்பட்ட வாசகர்களும் எழுத்து பக்கங்களில் எந்த வடிவில் நிரம்பியிருந்தாலும் சரியென வாசிக்கப் பழகிக் கொண்டார்கள். வாசித்தவன் அது பற்றி வெளியே யாரிடமேனும் பேசுவதையும் நிறுத்திக் கொண்டான்.

இது குறையாகப் பார்க்கப்பட வேண்டிய கருத்தும் அல்ல தான். சிறுகதைகளின் தரம் குறைந்து அல்லது நீர்த்துப் போன வடிவில் வரத்துவங்குகையில் பத்திரிக்கைகளும் தங்கள் பாணிகளை மாற்றிக் கொண்டன. ஆனாலும் ஏதோ ஒரு மூலையில் பிடிவாதமுடன் யாரோ ஒரு படைப்பாளி தன் சிறுகதைகளை மிக்க நிதானமாக எழுதிப் பார்த்துக் கொண்டே தான் இருக்கிறான். காலம் அவனை எப்படியேனும் வெளியே இழுத்துக் கொண்டு வந்தே விடுகிறது பல காலம் கழிந்தேனும்!

வருவதற்கு முன்பிருந்த வெயில் தொகுதியை கையிலெடுத்து முன்னுரைகளை எல்லாம் வாசிக்காமல் ஆட்டம் என்கிற முதல் கதைக்குள் நுழைந்தேன். காலகாலமாக இழவு காரியம் நடந்த வீட்டில் நடைபெறும் நிகழ்வுகளை சொல்லிக் கொண்டே சென்ற கதைகளைப் போன்ற கதை தான் இதுவும். (எடுத்தவுடனே இழவா? என்ற எண்ணமும் இருந்தது) இழவு வீட்டில் ஆட வந்த குறத்தியின் வேதனை மிகுந்த வலிக்கான தீர்வை இறந்து போன வயதானவரின் இரண்டாவது கர்ப்பம் தரித்த மனைவி கூட்டிப் போய் காட்டுவதாய் முடிகிறது. பெரிய ஈர்ப்பை எனக்குள் கொண்டு வரவில்லை இதன் முடிவு என்றாலும் சொல்முறையும் நேர்த்தியும் என்னை அடுத்த கதைக்கு நகர்த்தியது.

இயல்பாகவே ஒன்றுமே சொல்ல வராத.. மண்டையிலேயே ஏறாத புத்தகமாக இருந்தாலும் மண்ணைப் போல வாசித்து முடிப்பவன் தான் நான். வார்த்தைகளின் மீதுஇ படரும் பனி- இரண்டாவது கதை. இதை வாசித்து முடித்ததும் என் பழைய ஆரம்ப கால வாசிப்பு முறைமைக்குள் நுழைந்து மனநிம்மதியடைந்த உணர்வை அடைந்தேன். அப்போது புதிதாக ஒரு காலத்தில் நான்  அசோகமித்ரன், வண்ணதாசன், ராஜேந்திரசோழன் என்று சிறுகதைகளை வாசித்தால் என்னவென்று சொல்ல இயலாத கருமாந்திரம் வந்து என்னை சூழ்ந்து கொண்டு பேயறைந்தவன் போல முகத்தை வைத்துக் கொண்டு அமர்ந்திருப்பேன். காரணம் முன்பாக அப்படியான கதைகளை வாசித்த அனுபவம் துளி அளவு கூட இல்லாமல் இருந்தது தான். ஆனாலும் ஒரு காதலி இரவு கவிழும் நேரத்தில் சுற்றும் முற்றும் பார்த்தபடி வந்து என் கையில் கடிதமொன்றை திணித்து விட்டு கன்னத்தில் முத்தமிட்டு விட்டுயாராச்சிம் பாத்துருவாங்க நான் போறேன்என்று சொல்லி ஓடிப்போனது போன்றே இருக்கும்! (இப்படியெலாம் உதாரணமா? அட இருக்கட்டுமப்பா)

இந்தத் தொகுதியில் பத்துக் கதைகள் உள்ளன. கிராமியம் சார்ந்த கதைகள் என்றால் என்னால் இயல்பாக அதனுள் நுழைந்து விட முடிகிறது. கதைகளில் வரும் ஒவ்வொரு வீதிகளையும், காடு வரப்புகளையும் அருகிலேயே சந்தித்தது போன்று. நீண்ட காலமாயிற்று ஒரு தொகுதி முழுக்க மிக சந்தோசமாய் வாசித்து. முன்பு சொன்ன ஆட்களிடம் இருந்த கட்டுப்பாடுகள் எதுவுமின்றி ட்ராகன் டாட்டூ சிறுகதை இயல்பாக . எந்த நாளும் அவர்களால் இப்படியான கதையொன்றை புனைவாகக்கூட எழுத இயலாது தான். மகிழம்பூ சிறுகதை வாசித்துக் கொண்டிருக்கையில் அந்த புதிய திருமணமான பெண் தன் நேசத்திற்குரியவனிடம் சந்திப்பிற்குப் பிறகு விடை பெற்றுச் செல்ல வேண்டுமென யோசித்தே படித்தேன். அதன்படியே இருக்கையில்.. “செமெஎன்று முனகிக் கொண்டதும் நிகழ்ந்து விட்டது. தொகுதியில் உப்புச்சுவை என்கிற கதை தந்தைக்கும்  மகனுக்குமான நட்புறவை எளிமையாக காட்டிச் சென்றது. இந்தக்கதை என் மனதிலிருந்து எப்போதும் நீங்காது தான்.

இறுதியாக சாருநிவேதிதாவின் முகப்புரையை வாசித்தேன். உலகத்தரமான கதைகள் என்றும், ஹாருகி முரகாமி, கார்ஸியா மார்க்கேஸ், ஹூவான்ருல் ஃபோவ் போன்ற எழுத்தாளர்களின் உலகு சார்ந்த கதைகளென்றும் சொல்லியிருக்கிறார். இந்த எழுத்தாளர்களின் ஒன்றிரண்டு கதைகளை தமிழில் வாசித்த அனுபவத்தில் ஆமாம் என்று சொல்லத் தோன்றுகிறது. அட ஆமாம்.. சொன்னால் தான் இப்ப என்ன? மிக்க சந்தோசம் ஜி.கார்ல் மார்க்ஸ். நிறைய என்றில்லா விட்டாலும் அவ்வப்போதேனும் எழுதுங்கள் சமயம் உள்ளபோதெல்லாம்!


வருவதற்கு முன்பிருந்த வெயில் (சிறுகதைகள்)

எதிர் வெளியீடு. விலை 100. பேச : 9942511302, 04259-226012.

000

Post Comment

வெள்ளி, நவம்பர் 25, 2016

ஊதா நிற செம்பருத்தி, பொறுப்புமிக்க மனிதர்கள்-பார்வை
ஊதாநிறச் செம்பருத்தி - சிமாமந்தா எங்கோசி அடிச்சி

ஆசிரியரின் மிக நீண்ட சிறுகதைகளை இலக்கிய இதழ்களில் ஆங்காங்கு வாசித்த அனுபவம், மற்றும் பிரேம் (ரமேஷுடன் இணைந்து சுரேஷ் பாலா போல, எழுதிய சில புத்தகங்கள்) செய்த மொழிபெயர்ப்பு என்னை இந்த புத்தகத்தை வாங்கத் தூண்டியதாக கொள்ளலாம். யார் வெளியிட்டார்கள்? என்பதை கவனிக்கும் பொறுமை கூட எனக்கில்லை.

நாவலை வாசிக்கத்துவங்கி கிட்டத்தட்ட 80 பக்கம் வரை வந்த பிறகுதான் எனக்குள் ஒரு சலிப்பும், வேதனையும் நைஜீரியாவிலிருந்து காற்று வழி வந்து ஒட்டிக் கொண்டது! இவ்வளவு சலிப்பான ஒரு மொழிபெயர்ப்பு நாவலை நான் என் வாழ்நாளில் வாசித்ததே இல்லை! ஒருவேளை நான் கிறிஸ்துமஸ் கொண்டாடுபவனாக இருந்திருந்தால் இந்த நாவலைத்தான் சிறப்பு என்றும் கூட கூறிவிடலாம்.

எந்த நேரமும் தேவாலய மணி ஒலித்துக் கொண்டிருக்கும் நாவல் இது. சாப்பாட்டுக்கும் முன்பாக ,பின்பாக, வாசிக்கப் போவற்கும் முன்பாக, என்று எந்த நேரமும் கடவுள் சிந்தனைசிமாமந்தா பெண்ணியத்தின்  ஒரு முக்கிய பகுதியான?? கருப்பின பெண்ணியத்தின் குரலாக ஒலிப்பவர் என்று முன்பாக குறிப்புகள் வாயிலாக அறிந்தது தான்.

படிமம், ஆண் தன்மை, அமைப்பின் ஒரு பகுதி, சிதைவாக்கம்,பெண்ணிய இயங்கியல், மரபு, தொன்மம், தொல் படிமம், நீண்ட காலமாயிற்று இவைகளிடமிருந்து தப்பித்து வந்து! கடைசிச் செய்தி- கருப்பினப் பெண்ணியத்தின் செய்தியாக பதிவுறும் சொற்கள்!

காம்பிளி என்கிற படிக்கப்போகும் பெண்வழியாக அவள் சொல்வது போன்று செல்லும் இந்த நாவலில் தன் அம்மா, அப்பாவிற்கு டீயில் விஷம் தந்து கொன்றதை ஏற்றுக் கொள்கிறாள். வீட்டினுள் அதிகாரம் செலுத்தும் தொன்மம் சார்ந்த கணவர்களை கொன்று விடலாம் என்கிற பாடத்தை அம்மா வாயிலாக காம்பிளி அறிந்து கொள்ளும் குடும்பக்கதை அழகு தான். காம்பிளியும் நாளை அல்லது அவள் போன்ற பெண்கள் இதை தொடர வேண்டுமென்பதே ஆசை என்பதே இந்த மொழிபெயர்ப்புக்கு வகை செய்திருக்கும். யாரும் யாரையும் திருந்திக்கொள்ள அவசியமே இல்லை! கொன்றே வாழலாம், சிறை செல்லலாம்!


ஒரு நாவலை தமிழில் வாசிப்பவர்கள் அனைவரும் பல பல வழிகளை திறந்து வைத்துக் கொண்டு வாசித்துக் கொண்டிருக்கிறார்களா? என்று இப்போது பயம் கவ்வுகிறது! கலாச்சாரங்களை அறிந்து கொள்வதற்காக இன்னமும் மொழிபெயர்ப்பு நாவல்களை (ஆங்கில வாசிப்பில்லாதோர்.. எமைப்போன்று) வாசிப்போர் வரிசையில் தான் நான். கலாச்சாரங்கள் நமக்கு நன்மை பயக்கட்டும்!

000


பொறுப்பு மிக்க மனிதர்கள் (நாவல்)
மனு ஜோசப்

கடற்கரையில்  தங்கள் அம்மாக்களைப் போன்ற தோற்றம் வந்து விடக்கூடாதே என்று பயந்து ஓடும் நல்ல ஷூக்கள் அணிந்திருந்த தனித்த இளம்பெண்கள் விரைவாக நடந்து சென்றார்கள்! கதையின் தலித்திய நாயகன் அய்யன் மணியின் கற்பனைகளிலிருந்து நாவல் துவங்குகிறது. எந்த நேரமும் மகன் ஆதியின் கையேட்டில் புகார்களை எழுதித்தரும் கிறிஸ்துவப்பள்ளியாசிரியர்கள்! அவனைப்பற்றிய கவலையில் இருக்கும் அய்யன் மணியின் மனைவி ஓஜா என்று நாவல் ஒரு குடும்ப அமைப்பிற்குள் உடனடியாக வந்து விடுகிறது.

ஆரம்பத்தில் ஆதியை அப்பா அம்மா விளையாடக் கூப்பிடும் சிறுமியை கீழே படுக்க வைத்து மேலே.. பலர் வந்து அவனைப் பிரித்தெடுக்கிறார்கள். இரவில் அய்யன் மணியும், ஓஜாவும் மகன் உறங்கி விட்டானென அப்பா அம்மா விளையாட்டைத் துவங்கும் சமயத்தில் ஆதி இருளில் எழுந்தமர்ந்து, “நேத்து நான் இதை விளையாடிய போது அவங்க விடலைஎன்கிறான்.

ஆதியின் பள்ளியில் சகோதரி சேஸ்டிடி  அய்யன் மணியை, ஏன் நீங்கள்  இயேசுநாதரை ஏற்றுக் கொள்ளக் கூடாது?, என்றும், ஆதியின் மேல் கல்விச் செலவுகளை சலுகைகள் காப்பாற்றுமென்கிறாள். அய்யன் மணி  சகோதரியை ஜமாளித்து வெளியேறும் காட்சியில் புரிந்து விடுகிறது அவனின் தனிப்பட்ட சில சாமார்த்தியங்கள். அது நாவலின் முடிவு வரை தொடர்கிறதுமகனிடம் இல்லாத சாமார்த்தியங்கள் இருப்பதாக உலகை நம்ப வைக்க அவன் நாவலின் முடிவு வரை திட்டங்களை வகுத்துக் கொண்டேயிருக்கிறான்பிராமணர்கள் மீதான தன் கோபத்தை ஒரு தலித்தின் கோபமாக நாவல் முழுக்க பதிவு செய்தபடி வந்து கொண்டே இருக்கிறார் ஆசிரியர்.

தமிழில் க. பூரணச்சந்திரன் மிக லகுவாக மொழிபெயர்த்திருக்கிறார்.

எதிர் வெளியீடு : விலை 250. பேச : 04259-226012.

000

Post Comment